மூலிகைக்கு தோட்டம்; பறவை, தொல்லியலுக்கு காட்சிக்கூடம் என அசத்தல்: இயற்கையுடன் வரலாற்றை பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளி

சேலம்: சேலம் அருகே செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில், இயற்கையுடன் சேர்ந்து வரலாறு மற்றும் தொல்லியல் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. வெற்று பாறைகள் கோயில் கருவறைக்குள் சிலையாவதும், சாலையோரத்தில் வெற்று படிக்கற்களாக தங்கி விடுவதும், அதனை செதுக்கும் சிற்பியின் கை வண்ணத்தில் உள்ளது. அதுபோலவே கிராமப்புற மாணவர்களிடம் சிறந்த எண்ணமும், அறிவும் இருந்தாலும், அவர்களின் ஆசிரியர்களை பொறுத்தே திறன் வெளிப்படுகிறது. அப்படியொரு முயற்சியில் வெற்றி பெற்று, இயற்கையோடு ஒன்றிய கல்வியை வழங்கி வருகிறது, சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளி. சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில், புழுதிக்குட்டை தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. வாழப்பாடியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பள்ளியில், அதிக எண்ணிக்கையில் படித்து வருவது மலைவாழ் மக்களின் குழந்தைகள். தற்போதைய டிரெண்டான கணினி வழிக்கல்வியுடன், மூலிகை தோட்டம், பறவை மற்றும் தொல்லியல் காட்சிக்கூடம், கல்வெட்டுகளை படியெடுத்தல் என இயற்கையையும், வரலாற்றையும் ஒன்றுசேர கற்பிக்கும் பள்ளியாக இது விளங்கி வருகிறது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் கூறியதாவது: இன்றைய சூழலில் மாணவர்களது ஆர்வம் பெரும்பாலும் கைபேசி, கணினி விளையாட்டுகளிலேயே உள்ளது. இதற்கு சிறந்த மடைமாற்றமாக இயற்கை வழிக்கல்வியும், வரலாற்றுத் தேடலையும் மாணவர்களுக்கு புகுத்தி வருகிறோம். முதற்கட்டமாக, மலைவாழ் குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணத்தை உருவாக்க, வண்ணமயமான விளையாட்டு உடையுடன், டை, பெல்ட் மற்றும் ஷூக்கள் அணிந்து வர வைத்துள்ளோம். கொடையாளர்களின் உதவியால் கணினி வழி, ஸ்மார்ட் தொலைக்காட்சி, புரஜெக்டர், மைரா கேஸ்டிங் தொழில்நுட்பம் என கல்வியின் அடுத்த பரிணாமத்தில், மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் நேர்மை பண்பிற்கு வித்திடவும், அவர்களின் சிரமத்தை தவிர்க்கவும், பள்ளியிலேயே அங்காடி உள்ளது. அதாவது, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷார்ப்னர் மற்றும் பேனாக்களை வைத்து, அருகிலேயே ஒரு உண்டியலும் வைக்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு, அதற்குரிய தொகையை உண்டியலில் செலுத்தலாம்.

50 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட பல உயிரினங்களும், தாவரங்களும் இப்பொழுது பெரும்பாலும் இல்லை. இப்படியே சென்றால் பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் என, பூமி எந்தவொரு உயிரினமும் வாழ தகுதியற்றதாகி விடும். எனவே, சிறுவயதிலிருந்தே மாணவர்கள் இயற்கையை காக்க வேண்டும் என வலியுறுத்தி, தோட்டத்தில் மூலிகைகளை வளர்த்து, அதன் பயன்களை கற்று தருகிறோம். இதேபோல், பறவையினங்களை காக்க, அவற்றை உற்றுநோக்க கற்றுக்கொடுப்பதுடன், பள்ளியிலேயே பறவைகள் காட்சிக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் இதற்கான பிரத்யேக பயணம் மேற்கொண்டு, 200 வகையான பறவைகள் படம்பிடிக்கப்பட்டு, அவற்றின் பெயர், விளக்கத்துடன் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பது, அவற்றிற்கு தண்ணீர், தானியம் வைக்கும் பழக்கத்தினை மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்.

நவீன காலமாற்றம் என்ற பெயரில், ஏராளமான தொல்லியல் சின்னங்களும், கல்வெட்டுகளும் அவற்றின் அருமை தெரியாமல் சிதைக்கப்பட்டு வருகின்றன. அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைப்பதுடன், களப்பயணம் மூலமாக கல்வெட்டு, தொன்மைச் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட வரலாறு, சின்னங்களை அறியும் வகையில், பள்ளியிலேயே வரலாற்றுப் பொருட்கள், படங்கள் அடங்கிய காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க உணவுகளை ஊக்குவிக்கும் வகையில், மாதம் ஒருமுறை உணவுத்திருவிழா நடத்தப்பட்டு அனைவருக்கும் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. கல்வி கற்பிப்பதோடு இயற்கை சார்ந்த அறிவினைப் போதிப்பதையும், நமது முன்னோர்களின் தொன்மைத்தடயங்களை தேடிப்பயணிக்கவும் மாணவச் செல்வங்களுக்கு வாய்ப்பினை வழங்கி வருகிறோம். இவ்வாறு தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

நாங்களும் அமைச்சர்கள் தான்

மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் மற்றொரு திட்டம் அமைச்சரவை திட்டம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு இலாகா என பொறுப்பு பகிர்ந்து அளிக்கப்படும். உள்துறை, சுகாதாரம், மதிய உணவு, வருவாய், சுற்றுப்புறச் சூழல் என துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களின் பதவிக்காலம் ஒரு மாதம் என்றாலும், சிறப்பாக  பணியாற்றினால் கால நீட்டிப்பும் வழங்கப்படுகிறது. வகுப்பு மாணவ தலைவர்கள்  அனைவரும், பள்ளியின் மாணவர் தலைவனால் வழிநடத்தப்படுகிறார்கள்.

தலைமை ஆசிரியர் பெற்றுள்ள விருதுகள்:

* 2005ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக சிகரம் ஆசிரியர் விருது.

* 2017ம் ஆண்டில் புதுமை கற்பித்தல் ஆசிரியர் விருது.

* 2017ம் ஆண்டில் ரோட்டரியின் சார்பாக நேஷனல் பில்டர் விருது.

* கடந்த 2018ம் ஆண்டில் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது.

* நடப்பு 2019ம் ஆண்டில் அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை சார்பாக நல்லாசிரியர் விருது.

கரும்பலகைகளுக்கு குட்பை

பள்ளியில் கரும்பலகைகளை அகற்றி, கற்றல், கற்பித்தலுக்கு வெள்ளைப் பலகைகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சாக்பீஸ் துகள்கள் காற்றினில் கலந்து, மாணவர்களுக்கு ஏற்படும் சுவாசம் தொடர்பான நோய் தொற்றுகள் அறவே தவிர்க்கப்படுகிறது. மேலும், எழுதுதல், படம் வரைதலுக்கு பல வண்ண பேனாக்களை பயன்படுத்துவதால், மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. இந்த வெள்ளை பலகைகள் சமயத்தில், புரஜெக்டர் திரையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Related Stories: