எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜாதிவெறி வன்முறைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ‘எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ அமலில் உள்ளது. இம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை இச்சட்டத்தின் மூலம் உடனடியாக கைது செய்ய முடியும். இந்த நிலையில், இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உரிய விசாரணையின்றி கைது செய்யப்படும் பிரிவை இந்த சட்டத்தில் இருந்து நீக்கி கடந்த 2018 மார்ச் மாதம் உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கிற்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்சநீதிமன்றம் கூறியது. எனினும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது எனப் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரலில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதில், உடனடி கைதுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவால் போராட்டங்களும், வன்முறைகளும் ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கதானது இன்று அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன்மூலம், கைது செய்ய 2 நீதிபதிகள் அமர்வு விதித்த தடையை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரத்துக்குள் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: