பரமக்குடி அருகே பழங்கால உறைகிணறு : கீழடியை போன்று அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

பரமக்குடி: கீழடியை போன்று பரமக்குடி அருகே பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப் பெருமாள் கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய போது புதைந்திருந்த உறைகிணறு வெளியே தெரிந்துள்ளது. உறைகிணற்றின் 4 அடுக்குகள் அளவுக்கு மண்ணை தோண்டி எடுத்த போது மண்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்பது தொல்லியல் ஆர்வலர்களின் கணிப்பு. கீழடியை போன்று சமகாலத்தை ஒட்டிய உறைகிணறாக இருக்கும் என்று அகழ்வராய்ச்சி ஆர்வலர்கள் கணித்துள்ளனர். கீழடியில் இருந்து பாம்பு விழுந்தான் கிராமம் 50 கி.மீ. தொலைவில் இருப்பதால் இது வைகை நாகரீகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கீழடி அகழாய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3ம் கட்டமாக அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4ம் கட்ட அகழாய்வை மேர்கொண்டது. இதைத்தொடர்ந்து 5ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன. இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன. கடந்த ஜுன் 13-ம் தேதி தொடங்கிய கீழடி 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: