4 ஆண்டில் எவ்வளவு பேர் மோசடியாக சேர்ந்தார்களோ?: என்.கார்த்திகேயன், முதுநிலை மருத்துவ மாணவர்

தகுதியுள்ள மாணவர்களை மருத்துவராக்குவோம் என்று சொல்லிக்கொண்டு நீட் தேர்வை கொண்டு வந்தது அரசு. ஆனால் அதில் இடஒதுக்கீடு நடைமுறை முறையாக கடைபிடிக்கப்படவில்லை. நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக  தமிழகத்தில் தான் அதிக அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஆனால், இங்குள்ள மாணவர்களுக்கு தகுந்த அடிப்படையில் ஒதுக்கீடு தராதது பற்றி இதுவரை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவே இல்லை என்பது வேதனையானது.  மண்டல் கமிஷன் அறிக்கைப்படி மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் 27 சதவீதம் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதாக  மத்திய அரசும் உறுதியளித்தது. ஆனால் இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் மத்திய அரசு நிரப்புகிறது.  அந்த இடங்களிலும் பிற பிரிவினரை மத்திய அரசு நிரப்புகிறது. இதுவே இந்திய அரசியமைப்பு சட்டத்துக்கும், சமூகநீதிக்கும் எதிரானது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்ததே இல்லை. மருத்துவ படிப்பு பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

1923 வரை இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக இருந்தது. பின்னர், காலப்போக்கில் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. மாநில அளவில் இருந்த நடைமுறை   எல்லாம் தகர்க்கப்பட்டு, தகுதியுள்ள மாணவர்களை உருவாக்குவதற்கே நீட் தேர்வு வைக்கிறோம் என்று மத்திய அரசு திணித்து விட்டது என்று  தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்டு சொன்னால்,  நீட் தேர்வில் தான் ஆள்மாறாட்டம்  நடைபெற்றுள்ளது. இப்போது நீட் தேர்வு ேதவை என்று வாதிட்டவர்கள், தகுதியே இல்லாதவர்கள் மோசடித்தனமாக  சேர்ந்ததற்கு என்ன சொல்லப்பபோகிறார்கள்?முன்பு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. மாநில அரசு பாடத்திட்டத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் தமிழகத்தில், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள்  கேட்கப்படும் நீட் தேர்வு,  எப்படி அனைவருக்கும் சமமானதாக இருக்கும்? அனைத்து மாநில அரசுகளின் பாடத்திட்டங்கள் ஆய்வு பொதுவான கேள்வித்தாள் உருவாக்கப்படுகிறது என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. நீட் தகுதித்தேர்வு  என்பது ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களை மருத்துவப்படிப்புக்கான போட்டியில் இருந்து கழற்றி விடும் செயல். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வில் பங்கேற்க உடைகட்டுப்பாடு, மத அடையாளங்களுக்கு தடை, பெல்ட்,  மோதிரம், கம்மல், மாணவிகள் பாரம்பரிய உடை அணியக்கூடாது. சுடிதார் அணிய வேண்டும், ஆனால் துப்பட்டா அணியக்கூடாது. தலைவிரி கோலமாக சென்று தேர்வு எழுத வேண்டும்.

இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள், நிர்ப்பந்தங்கள். இந்த  சோதனைகளால், தேர்வு எழுத செல்லும் மாணவருக்கு மனரீதியாக பதற்றம், எரிச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள். அந்த மாணவர் எப்படி சிறப்பாக தேர்வு எழுத முடியும். நேர்மையாக தேர்வு நடைபெறுவதாக காட்டிக்கொள்வதற்காக இவை  திட்டமிட்டு அறங்கேற்றப்படும் நாடகம். ஆனால் வட இந்திய மாநிலங்களில் நீட் தேர்வுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. திட்டமிட்டே தகுதியற்றவர்களை தேர்ச்சி அடைய வைத்துள்ளனர். மாணவர் உதித்சூர்யா  இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே. நாடு முழுவதும் 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் எவ்வளவு பேர் முறைகேடாக மருத்துவம் படிக்க சேர்ந்திருப்பார்களோ?

இது நேர்மையாக மருத்துவத்தை சேவையாக நினைத்து செய்வோருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துகிறது. இப்படி மருத்துவம் சேர்பவர்கள் வருங்காலத்தில் எப்படி சிறப்பான மருத்துவர்களாக இருப்பார்கள். முறைகேடு செய்தவர்கள் அனைவரும்  தண்டிக்கப்பட வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும்.நீட் தேர்வில் தான் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது. இப்போது நீட் தேர்வு ேதவை என்று வாதிட்டவர்கள், தகுதியே இல்லாதவர்கள் மோசடித்தனமாக சேர்ந்ததற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

Related Stories: