குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் டெங்கு சிறப்பு சிகிச்சை வார்டு திறப்பு: காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.... காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

நாகர்கோவில்: குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2, 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 60 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி அட்மிட் ஆகி வருகின்றனர். தொடர் காய்ச்சல் உள்ளவர்கள் உரிய பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நகர் நல அலுவலர்கள் மேற்பார்வையில் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் நடக்கின்றன.

கிராமப்புற பகுதிகளில் சுகாதார துறை துணை இயக்குனர் மதுசூதனன் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சுகாதார பணியாளர்கள் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் வீடுகளில் உள்ள குடிநீரில் கொசு புழுக்கள் உற்பத்தி உள்ளதா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள். மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துமவனைகளில் காய்ச்சல் பாதித்து உள் நோயாளிகளாக, வெளி நோயாளிகளாக இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதித்தவர்களின் கணக்கெடுப்பு தினமும் நடக்கிறது. பள்ளிகளில் விடுமுறை எடுக்கும் மாணவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு, அவர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறையில் இருந்தால் உரிய பரிசோதனை நடத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. சிரட்டை, பூந்தொட்டிகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்போது டெங்கு சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு உள்ளது. 40 படுக்கை வசதிகளுடன் இதை அமைத்துள்ளனர்.

தற்போது இதில் 3 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர் காய்ச்சல் காரணமாக இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகி, உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: