காவல்துறையில் சிறப்பு பணியாற்றிய 644 காவலர்களுக்கு முதல்வர் விருது: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்

சென்னை: காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 644 காவலர்களுக்கு முதல்வர் விருதை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில்  ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்  நிலையங்களில் பணிபுரியும் 230 போலீசார், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 289 போலீசார், ஆயுதப்படையில் பணிபுரியும் 27 போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம், நவீன கட்டுப்பாட்டறை,  சென்னை பாதுகாப்பு காவல் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 98 போலீசார் என மொத்தம் 644 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சென்னை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 644 காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் வழங்கி வாழ்த்துக்களை  தெரிவித்தார். நிகழ்ச்சியில், சென்னை, காவல் கூடுதல் ஆணையர்கள் தினகரன் (வடக்கு), அருண் (போக்குவரத்து), ஈஸ்வரமூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு), பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும்  போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது: விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள, காலக்கட்டத்தில் போலீசாரின் பணி மேலும், சவாலானதாக உள்ளது. எனவே, காவல்துறையில் பல தொழில்நுட்பங்களை  பயன்படுத்தினால், மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். அத்தகைய தொழில்நுட்பங்களை சென்னை போலீஸ் துறையில் பயன்படுத்திய காரணத்தினால், மத்திய மனித வள மேம்பாட்டு துறை, இரண்டு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. இவ்வாறு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.

Related Stories: