வக்கீல்கள் சங்க நிகழ்ச்சியில் பரபரப்பு பேச்சு சென்னையிலேயே குடியேறவே விரும்புகிறேன் : முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி விருப்பம்

சென்னை: சென்னையுடன் ஒன்றிவிட்டதால் சென்னையிலேயே குடியேற விரும்புகிறேன் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி தெரிவித்துள்ளார்.வி.கே.தஹில் ரமானி யின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது, தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பங்களாவை காலி செய்தார். இந்நிலையில், அவருக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் பிரிவு உபசார விழா நேற்று நடந்தது.அசோசியேஷன் தலைவர் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், ஜெயசந்திரன், எம்.எஸ்.ரமேஷ், தண்டபாணி ஆகியோரும், மூத்த வக்கீல்களும் கலந்துகொண்டனர்.

அப்போது, முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேசியதாவது: பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்துவிட்டேன். இந்த ஓராண்டில் 5040 வழக்குகளை முடித்து வைத்துள்ளது நிறைவாக உள்ளது. இதற்காக நீதிபதி எம்.துரைசாமிக்கு நன்றி. எனது ராஜினாமா சமயத்தில் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து காட்டிய அன்பை என்றும் மறக்க முடியாது. மும்பையை விட சென்னையே சிறந்தது என்று கருதுகிறேன். மும்பையை ஒப்பிடும் போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதி  என எல்லாற்றிலும் சென்னை நன்றாக உள்ளது. எனவே மும்பையில் இருப்பதை விட தமிழகம் பிடித்ததால்தான் சென்னையில் குடியேற விரும்புகிறேன். எனவேதான் நானும் எனது கணவரும் சேர்ந்து முடிவெடுத்து சென்னையில் வீடு வாங்கினோம். ஆனால், விதி வேறு மாதிரியாகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தில் நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியிலும் தஹில் ரமானி கலந்துகொண்டார். அவருக்கு வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் நினைவு பரிசுகளை வழங்கினர்.

Related Stories: