கிரய ஒப்பந்தம் செய்து 18 லட்சம் மோசடி சகோதரர்கள் கைது

சென்னை: நிலத்தை விற்பனை செய்ய கிரய ஒப்பந்தம் செய்து, 18 லட்சம் மோசடி செய்த இருவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஹரிஹந்த்கோத்தி (56). இவரிடம், பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மகன் பிரதாப், லோகேஷ், உறவினர் ராமகோவிந்தன், அவரது மகன் நரேஷ் ஆகியோர், தங்களுக்கு சொந்தமான 3.25 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி, கடந்த 2006ம் ஆண்டு, கிரைய ஒப்பந்தம் செய்து, 18 லட்சம் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஒப்பந்தப்படி நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல், கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து ஹரிஹந்த்கோத்தி, கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., அரவிந்தனிடம் புகார் கொடுத்தார். இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, பொன்னேரி ஆலாடு கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் பிரதாப்(38), லோகேஷ்(34) ஆகிய இருவரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.

Related Stories: