வில்லிவாக்கம், இந்திரா நகர், ராயபுரத்தில் 198 கோடியில் புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம்  198 கோடி செலவில் வில்லிவாக்கம், இந்திரா நகர், ராயபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், சென்னை வில்லிவாக்கம் திட்ட பகுதியில் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் “பி”, “சி” மற்றும் “டி” பிரிவு அரசு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ், 1.47 ஏக்கர் நிலத்தில், 71 கோடியே 71 லட்சம் செலவில், 324 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு படுக்கை அறை, கூடம், சமையலறை,  படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர் மற்றும் கழிவுநீர்  வசதிகள்,  சூரிய மின்சக்தி இணைப்பு, மின்தூக்கி, தீயணைப்பு வசதி, ஜெனரேட்டர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல், சென்னை இந்திரா நகர் திட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள 60 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 9 கடைகள், ராமாபுரத்தில் 384 குறைந்த வருவாய் பிரிவினருக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் புறநகரின் அனைத்து உட்கட்டமைப்புகளுடன் கூடிய 214 வீட்டு மனைகள் என மொத்தம்  198 கோடியே 39 லட்சம் மதிப்பிலான அக்குமாடி குடியிருப்புகள், கடைகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர்  ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: