செப். 30ல் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை: சென்னை ஐஐடியில் பட்டமளிப்பு விழா கடந்த ஜூலை 19ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் வர முடியாத சூழலால் பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. ஐஐடி பட்டமளிப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் வரும் 30ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுவதாகவும், இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் ஐஐடி நிர்வாகம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்கள் பெற உள்ளனர். அவர்களுக்கு தனித்தனியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபின் சென்னைக்கு மோடி வருகிறார். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் நினைவூட்டல் கடிதம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்துக்கான திட்டங்கள்,  நதிநீர் பங்கீட்டு பிரச்னைகள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் அந்த நினைவூட்டல் கடிதத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories: