விளம்பர பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் தேன்கனிக்கோட்டையில் கைது

* 14 நாட்களுக்கு பிறகு தனிப்படையினர் மடக்கினர்

சென்னை: பள்ளிக்கரணையில் விளம்பர பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியான வழக்கில் பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் 14 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி அருகே கைது செய்யப்பட்டார். சென்னை குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், கடந்த 12ம் தேதி மதியம் வேலை முடிந்து துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை வழியாக வீட்டுக்கு மொபட்டில் திரும்பிக்கொண்டிருந்தார். பள்ளிக்கரணை அருகே வந்தபோது சாலை நடுவே சென்டர் மீடியனில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவுக்காக வைத்திருந்த பேனர் திடீரென மொபட்டில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர்.

மேலும் மாநகராட்சி உதவி பொறியாளர் கொடுத்த புகாரின்பேரில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய  தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 5  தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி நேற்று முன்தினம் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வீட்டுக்கு போலீசார் சம்மன் அளிக்க

சென்றனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் சம்மனை வீட்டின் கதவில் ஒட்டிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே அதிமுக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் நம்பர்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது ஜெயகோபால், அவரது மைத்துனர் ஆகியோர் திருச்சி, ஒகனேக்கல், கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு சென்று இருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. எனவே 3  தனிப்படையினர் திருச்சி, ஒகனேக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் ஆனதால் இருவரும் வேறொரு எண்கள் மூலம் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து குடும்பத்தினரின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இந்நிலையில் அவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை தேடி ஒகேனக்கல் சென்றனர். அங்கு, ரஜினி என்பவரது உதவியுடன், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அவர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்று, அங்கிருந்த ஜெயகோபாலை கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். சுப பலியான சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஜெயகோபால் 14 நாட்களுக்கு பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டப்பஞ்சாயத்து பள்ளிக்கரணை போலீசார்

பள்ளிக்கரணை பகுதியில்தான் அதிக அளவில் நில மோசடிகள் நடைபெறுகின்றன. போலியான ஆவணங்களை தயாரித்து பலரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற பல வழக்குகள் மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் உள்ளன. இதற்கு உள்ளூர் போலீசார் அதிக அளவில் உடந்தையாக உள்ளனர். நில மோசடி, மிரட்டல் புகார் வந்தால் உள்ளூர் போலீசார் விசாரிப்பது இல்லை. அதிகாரம் உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் பள்ளிக்கரணை போலீசாரின் பணி. இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துத்தான் இந்தப் பகுதிக்கு வருகின்றனர். சமீபத்தில் பெண் வக்கீல் ஒருவர் கொடுத்த புகாரைக் கூட பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், அதிமுக பிரமுகர் ஒருவருக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்து சமரசமாக போகும்படி போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார்.

இதுபோன்று பள்ளிக்கரணை போலீஸ் அதிகாரி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தப் புகார் மீது கூட அவரை அதிகாரிகள் மாற்றவில்லை. நிர்வாக ரீதியிலான மெமோ மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதை மற்றொரு போலீஸ் அதிகாரி விசாரித்து புகாரில் உண்மை இல்லை என்று எப்போது வேண்டுமானாலும் தள்ளுபடி செய்யலாம். ஆனால் அவரை மாற்ற விடாமல் ஆளும் கட்சியில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் நீதிமன்றம் தலையிட்டும் அவரை மாற்றாமல் அதிகாரிகள் தவிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: