தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை தொடரும் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை : 2015ம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி தினேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவால் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக அவர் வாதிட்டார். ஆனால் தமிழக அரசு இந்த சட்டத்தை அவசர கதியில் கொண்டு வந்து இருப்பதாக விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், வாதத்தில் முன்வைத்தார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டு இருந்தால் மட்டும் அந்த திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஆகும். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: