மாங்காடு அருகே சுகாதார துறையினர் சோதனை 10 ஆண்டாக கிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பி ஓட்டம்: போலீஸ் வலைவீச்சு

பல்லாவரம்: மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரித்திகா (11) என்ற 9ம் வகுப்பு மாணவி, சில தினங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மூன்று தினங்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து, மாங்காடு பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்கள் உருவாகும் நிலையிலிருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும் காய்ச்சல் யாருக்காவது உள்ளதா என்பதை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நரிவனம் சாலையில் இயங்கி வந்த பழைய டயர் குடோனை கண்டறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கிருந்த சுமார் 7 டன் பழைய டயர்களை பறிமுதல் செய்து, உரிமையாளருக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர். வீடுகளில் திறந்தவெளியில் தண்ணீர் பிடித்து வைத்து டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் நிலையில் இருந்த பேரல்களையும் பறிமுதல் செய்தனர். 100க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வீடுகள் மற்றும் தெருக்கள்தோறும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டது. இந்த பணிகளை பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் பலர் ஈடுபட்டனர்.

அப்போது, மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல், கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற அதிகாரிகள் அந்த கிளினிக்கை ஆய்வு செய்தனர். அதில், சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டாக கிளினிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகள் வருவதையறிந்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மாங்காடு போலீசில் போலி மருத்துவர் திருநாவுக்கரசு மீது புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய போலி மருத்துவர் திருநாவுக்கரசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: