நீர் பங்கீடு குறித்து கேரள அரசுடன் சுமூகமான ஆலோசனை: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: ‘‘நீர் பங்கீடு குறித்து கேரள அரசுடன் சுமூகமான ஆலோசனை நடந்தது’’ என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு நேற்று இரவு வந்த முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள நீர் பங்கீடு குறித்து இருமாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நீராறு, கல்லாறு, ஆணைமலையாறு, சிறுவாணி ஆற்றுப்பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதோடு பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தின் நிலை குறித்து விவாதிக்கப்டட்து.  நெய்யாற்றிலிருந்து விளவங்கோடுக்கு செல்லும் நீர் தொடர்ந்து வழங்கவேண்டும் என விவாதிக்கப்பட்டது.   இந்த ஆலோசனைக்கூட்டம் சுமூகமாக நடந்தது. இருமாநிலங்களும் குழு அமைத்து, விரிவான அறிக்கை தந்த பிறகு விவசாயிகளும், பொதுமக்களும் நன்மை பயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது நடந்துள்ள பேச்சுவார்த்தை வெற்றிபெறும். 15 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் பல ஆண்டுகளாக உள்ள பிரச்னை முடிவுக்கு வரும். இரண்டு மாநில விவசாயிகள், பொதுமக்களும்  பயன்பெறும் வகையில், கலந்து பேசி குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தகுழு  விரைந்து அறிக்கை தாக்கல் செய்ததும், இறுதிமுடிவு எட்டப்படும். கர்நாடகாவின் பிரச்னை குறித்து,  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி கர்நாடகத்திடம் பேசுவதற்கு  எந்தவாய்ப்பும் இல்லை. தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: