பொறியாளர்கள் 3 மாதம் ‘லீவ்’ எடுக்க தடை : முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு பொறியாளர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து  மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அக்டோபர் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பொறியாளர்கள், ஊழியர்கள் பணியில் அமர்த்த வேண்டும். வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அவர்கள் பணிபுரியும் வகையில் பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவதற்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும். அக்டோபர் 1ம் தேதி முதல் அணைகளுக்கு வரும் நீர் வரத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள அணைகள் பாதுகாப்பு இயக்ககத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: