சுகேஷ் சந்திர சேகருக்கு திடீர் பரோல் திகார் சிறைத்துறை இயக்குனர், கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன், அவரது நன்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை  டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, பி.குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இதைத்தொடர்ந்து மேற்கண்ட அனைவரும் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு தங்களது குற்றப்பதிவின் நகலை பெற்றுக்கொண்டனர்.டிடிவி.தினகரன் பாட்டியாலா நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில்,”சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட  வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இதில் விசாரணைக்கான எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில்  உள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவனீவ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில்,”இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தான் முக்கிய குற்றவாளியாக உள்ளார். ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் எந்தவித உத்தரவும் இல்லாமல் திகார்  சிறைத்துறை அதிகாரிகள் அவரை பரோலில் வெளியில் அனுப்பியுள்ளனர் என தெரிவித்தார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,” இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அக்டோபர் 14ம் தேதிக்கு  ஒத்திவைக்கிறது. முக்கிய குற்றாவாளியான சுகேஷ் சந்திரசேகருக்கு  அனுமதியும் இல்லாமல் பரோல் வழங்கப்பட்டுள்ளது  இதுகுறித்து விளக்கமளிக்க திகார் சிறைத்துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என உத்தரவிட்டார்.

Related Stories: