அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காலாண்டு விடுமுறையை ஒட்டி ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் இன்று காலாண்டு விடுமுறையை ஒட்டி குளிப்பதற்காக அந்த ஊரில் ஒதுக்குபுறமாக உள்ள நொண்டிகருப்பன் ஏரிக்கு சென்றுள்ளனர். ஒன்றன் பின் ஒன்றாக அந்த சிறுவர்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது 3 சிறுவர்கள் மட்டும் ஏரியில் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு சகதியில் சிக்கி கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற இரண்டு சிறுவர்களும் ஊருக்குள் சென்று பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடம் தகவலை தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்மக்கள் ஏரியில் இறங்கி அந்த சிறுவர்களை தேடியுள்ளனர்.

பிறகு அந்த மூன்று சிறுவர்களும் பொதுமக்களால் மீட்கப்பட்டு அருகிலுள்ள செந்துறை வட்டார தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே கூடி கண்ணீர் மல்க கதறி அழுதனர். இதை தொடர்ந்து உயிரிழந்த சிறுவர்கள் சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் ஜெகன், மருதமுத்து மகன் அன்பரசன், சுப்ரமணியன் மகன் ஆணைமுத்து ஆகிய மூவர் என்பது செந்துறை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த 3 சிறுவர்களின் உடல்களும் உடற்கூராய்விற்காக அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. ஏற்கனவே காலாண்டு விடுமுறையை ஒட்டி பள்ளி சிறுவர், சிறுமிகளை குளம், ஏரி, குட்டை, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலையங்களுக்கு அனுப்பக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளிட்ட பாதுக்காவலர்களின் கவனக்குறைவால் இந்த 3 சிறுவர்களின் உயிரானது பறிபோயுள்ளது. ஏற்கனவே நேற்று நீர் நிலையங்களில் நிகழ்ந்த விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், இன்று அரியலூர் மாவட்டத்தில் மேலும் 3 சிறுவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: