ஆதனக்கோட்டை அருகே கோயில் கட்ட துவங்கப்பட்ட பணிகள் அகற்றம்

கந்தர்வகோட்டை: ஆதனக்கோட்டை அருகே கோயில் கட்ட துவங்க பணிகள் அகற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே ராஜாபகதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் ஒரு பிரிவினர் கோயில் கட்ட ஆரம்ப பணிகளை செய்தனர். இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும், அதே கிராமத்தில் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் ஆர்டிஓ தண்டாயுபாணி நேரில் சென்று பார்வையிட்டு கோயில் கட்ட ஆரம்ப பணிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் தாங்கள்தான் பள்ளிக்கே இடம் கொடுத்தோம். எங்க தரப்பினர் பெயரில்தான் பட்டா உள்ளது. இந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்தை தருகிறோம் என்றனர்.

ஆனால் பள்ளிக்கு இடையூறாக கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேற்று வரை ஆரம்ப பணிகளை அகற்றாததால் புதுக்கோட்டை ஒன்றிய ஆணையர் சதாசிவம், துணை தாசில்தார் புவியரசன், ஆர்ஐ குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்வேலன், ராமசந்திரன், தினேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், எஸ்ஐக்கள் கனகராஜ், பழனிச்சாமி மற்றும் போலீசார் பாதுகாப்போடு கோவில் கட்ட போடப்பட்டிருந்த ஆரம்ப பூஜை பொருட்கள் மற்றும் அதற்காக பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தி ஜீப்பில் ஏற்றி சென்றனர். அதே போல் அதன் அருகில் இருந்த விநாயகர் சிலையையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

சாமி வந்து ஆடிய பெண்கள்

சாமி கும்பிடுவதில் இரு பிரிவுகளாக கிராம மக்கள் இருந்து வருவதால் அந்த தெருவில் இருந்த விநாயகர் சிலையும், தற்போது கட்ட தொடங்கப்பட்ட பூர்வாங்க கல்லையும் அப்புறப்படுத்தி விட்டனர். ஒன்றிய மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அவைகளை அகற்றும்போது கிராமத்து பெண்கள் சிலருக்கு சாமி வந்து சபித்தனர். மீண்டும் வருவாள் அம்பாள் என கூச்சலிட்டனர். போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகள் என சாமி சிலைகள் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை மற்றும் அம்மனாக வழிப்பட்ட கற்சிலை, கோயில் கட்ட யாகம் செய்யப்பட்ட செங்கற்கள் அனைத்தையும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: