பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு தந்த விவகாரம் ஐ.ஜி.முருகன் மீதான வழக்கை தெலங்கானா போலீஸ் விசாரிக்க தடை

சென்னை: காவல்துறை ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் தொடர்பான வழக்கை தெலங்கானா போலீசார் விசாரிக்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம். பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் ஏ.டி.ஜி.பி அருணாச்சலம், டி.ஐ.ஜி.தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி.சரஸ்வதி, டிஜிபி அலுவலக ஊழியர் ரமேஷ் ஆகியோர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது.  இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட குழு வழக்கை சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து முதலாவதாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி நடத்தினார்கள். இந்த நிலையில்,விசாகா குழுவில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதியை நியமிக்கக் கோரியும், ஐஜி.முருகனை பணிமாற்றம் செய்யக் கோரியும் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் இந்த வழக்கை கேரளா போன்ற அண்டை மாநில போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவில், ‘ஐஜி.முருகன் மீதான பாலியல் தொடர்பான வழக்கை தெலங்கானா போலீஸ் விசாரணைக்கு மாற்றி அமைத்தும், அடுத்த ஆறு மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இதில் ஐஜி.முருகன் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்தோ, அல்லது பெண் உயரதிகாரி ஒருவரை வைத்தோ வழக்கை தமிழ்நாட்டிலேயே விசாரிக்கலாம் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐஜி.முருகன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,”தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தமிழக அதிகாரிகளே விசாரிக்க எந்த ஆட்சேபனையும் கிடையாது.

அதனால் தெலுங்கானா மாநில போலீசார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஐ.ஜி.முருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,”ஐஜி.முருகன் பாலியல் தொடர்பான வழக்கை தெலங்கானா போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. அதேப்போல் இந்த விவகாரத்தில் பாதிகப்பட்டதாக கூறும் பெண் அதிகாரி மற்றும் தமிழக அரசு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டார். இதில் போலீஸ் அதிகாரியான முருகன் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ளார்.

Related Stories: