அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுகாதார சீர்கேடு டெங்கு கொசு புழுக்கள் இருந்த கம்பெனிக்கு 1 லட்சம் அபராதம்

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் இருந்ததால், ரூ.1லட்சம் அபராதம் விதிக்கபட்டது. அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், மண்ணூர்பேட்டை மங்களபுரம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகள்  உள்ளன. இங்கு சுமார் 5லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக மேற்கண்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழைநீர், செல்லும் கால்வாய்கள் பல இடங்களில் பராமரிக்காமல் உள்ளன. மேலும், பல கால்வாய்கள் உடைந்து தூர்ந்து போய் உள்ளன. இதனால், பல தெருக்களில் மழை நீரும், கழிவு நீருடன் குப்பைகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்பத்தூர் அடுத்த பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற 6வயது சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து நேற்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உத்தரவின்பேரில் அம்பத்தூர் மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், சுகாதார அதிகாரி டாக்டர் ஷீலா தலைமையில் அதிகாரிகள் குழு அம்பத்தூர் மண்டலத்தில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு குறித்து சோதனை நடத்தினர். மேலும், அவர்கள் டெங்கு கொசு உற்பத்தி உள்ள வீடு, கம்பெனி, வர்த்தக நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை அருகே உள்ள ஒரு கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த  கம்பெனிக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கம்பெனிக்கு உள்ளேயே தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு கம்பெனியில் போதிய சுகாதார வசதி செய்யவில்லை. இதனால், அவர்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். இதில்,  அவர்கள் பலரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அனைத்து கம்பெனி வளாகத்திற்குள் டெங்கு  கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில்லை என சுய சான்று அளிக்கவேண்டும் என உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு சான்று அளித்து விட்டு, அங்கு டெங்கு கொசு புழுக்கள் இருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரித்து, எந்த பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: