மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 40 பேருக்கு இன்று அடையாள சோதனை: அனைவரும் கல்லூரிக்கு வர டீன் உத்தரவு

மதுரை,: மதுரை மருத்துவக்கல்லூரியில் பயிலும் 40 பேருக்கான அடையாளச் சோதனை இன்று நடக்கிறது. இதற்காக விடுமுறை எடுத்திருப்பவர்கள், சுற்றுலா சென்றவர்களையும் அவசரமாக கல்லூரிக்கு வரும்படி அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  இவ்விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர்  உள்ளிட்ட சிலரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதோடு, துறைரீதியாக விசாரணையும் நடக்கிறது.தலைமறைவான உதித்சூர்யாவை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆள் மாறாட்டம்  மூலம் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்ந்த விவகாரம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து, அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், ஏற்கனவே நிறைவுபெற்ற, மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்து, அனைவரின் சான்றிதழ்களையும் மீண்டும் சரிபார்க்கும்படி சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி  அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

மதுரை மருத்துவக்கல்லூரியில் 250 பேருக்கான சேர்க்கை முடிந்துள்ள நிலையில், 210 பேரின் சான்றிதழ்கள் கடந்த இரு நாட்களாக சரிபார்க்கப்பட்டன. மீதமுள்ள 40 பேரின் சான்றிதழ்களையும் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது. விடுமுறை  நாளாக இருந்தபோதிலும், டீன் வனிதா தலைமையில் இந்தப்பணிகள் நடந்தது.டீன் வனிதா கூறுகையில், ``210 மாணவ, மாணவிகளின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 40 பேரில், சிலர் விடுமுறையில் உள்ளனர். சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.  இவர்கள் அனைவரையும் திங்கள்கிழமை (இன்று) வரச்சொல்லி உள்ளோம். இவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இவர்கள் வந்தவுடன் மாணவர்களின் முகம், அடையாளம் கண்டறியப்படும், ஆள்மாறாட்டமோ அல்லது  போலிச்சான்றிதழ்கள் அல்லது குளறுபடி என சட்டவிரோதமாக எது நடந்திருந்தாலும் உடனே சுகாதாரத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: