கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்தது பக்கிங்காம் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக தப்பினர்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கிங்காம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வடபழனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த விருக்குமார் (22), அஜய் (22) ஆகிய இருவரும், விடுமுறை நாளான நேற்று பொழுதுபோக்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கடற்கரைக்கு காரில் புறப்பட்டனர்.சோழிங்கநல்லூரில் இருந்து இசிஆர் இணைப்பு சலையான கலைஞர் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தின் மீது சென்றபோது, கார் இன்ஜின் திடீரென பழுதானதால், பிரேக் பிடிக்காமல் கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.  

அப்போது, யார் மீதும் மோதாமல் இருக்க காரை ஓட்டிய விருக்குமார் வலதுபக்கம் திருப்பியதால் கார் மரங்களின் நடுவே புகுந்து பக்கிங்காம் கால்வாயில் பாய்ந்து நீரில் மூழ்கியது. சற்றும் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் விருக்குமார், அஜய் ஆகியோர் நீரில் மூழ்கிய காரின் கதவை அவர்களாகவே திறந்து தண்ணீரில் இருந்து வெளியேறினர். தகவலறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கிரேன் மூலம் தண்ணீரில் மூழ்கிய காரை மீட்டனர்.

Related Stories: