சம்பளத்தில் வேறுபாடு காக்கிகள் புலம்பல்

கரூர்  மாவட்டத்தில் 2003ம் ஆண்டு முதல்நிலை காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் 2013ம்ஆண்டு முதல்நிலை, 2018 டிசம்பரில் தலைமைக்காவலர்கள் என பதவி உயர்வு  பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை சம்பளம் ₹37,200 என  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் ₹36,300 தான்  வழங்கப்படுகிறது. சுமார் 80 பேர் இந்த சம்பள வேறுபாடு காரணமாக பணத்தை இழந்து  வருகின்றனர். அருகில் உள்ள மாவட்டங்களான நாமக்கல், சேலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் இதே பேட்ஜில் இருப்பவர்களுக்கு  நிர்ணயித்தபடி வழங்குகின்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த  வேறுபாடு களையப்படாமல் இருக்கிறது என காக்கிகள் புலம்புகின்றனர். சாதாரண கோரிக்கையான இதனை நிறைவேற்றாததால் பணத்தை மாதந்தோறும் இழந்து வருகின்றனர்.  பலமுறை மனுக்களை அளித்தும் பலனில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

மாமூல் கொடுத்தவருக்கு எப்போதுமே விஸ்வாசம்

குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொண்டு வரும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். இதுவரை அமைதியாக இருந்தவர், சில அதிரடியை காட்ட தொடங்கி உள்ளார். புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த வரிசையில் சில இன்ஸ்பெக்டர்களை நேரடியாக அழைத்து எஸ்.பி. எச்சரிக்கையும் செய்து இருக்கிறார். இதனால் வேண்டப்பட்ட, நெருக்கமான மற்றும் ஸ்டேஷனுக்கு மாமூல் அள்ளி கொடுப்பவர்கள் மீது கூட வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறதாம். அது மட்டுமில்லாமல் வழக்கு பதிவு செய்ய மாட்டோம் என உறுதி அளித்து மாமூல் வாங்கிய பின், எஸ்.பி.யிடம் புகார் சென்று வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இது மாதிரி கேஸில், மாமூல் கொடுத்தவரை திருப்திப்படுத்த அவர் மீது புகார் கொடுத்தவரின் பின்னணி என்ன? அவர்களது குடும்பத்தில் கல்லூரி மாணவர்கள், அரசு வேலையில் உள்ளவர்கள் இருக்கிறார்களா? என்பதை பார்த்து அவர்களை மையமாக வைத்து மாமூல் கொடுத்த நபரிடம் இருந்து புகார் வாங்கி வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுகிறார்களாம். இப்படி கல்லூரி மாணவர்கள், அரசு வேலையில் உள்ளவர்கள் மீது வழக்கு பதிவு வந்தால், சிக்கல் ஆகி விடும் என கருதி, காவல்துறையை மீறி எஸ்.பி.யிடம் சென்று புகார் கொடுத்தவர்கள், தன் புகார் மீது நடவடிக்கையே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு செல்கிறார்களாம். எஸ்.பி.யிடம் இருந்து வரும் பேப்பரை குளோஸ் செய்த மாதிரியும் இருக்கும். மாமூல் கொடுத்தவருக்கு விஸ்வாசமாக நடந்து, திருப்திபடுத்திய மாதிரியும் இருக்கும் என ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிப்பு நடக்குதாம்.

ஐஜியை யார்? என்று கேட்ட போலீஸ்

புதுச்சேரி போலீசின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் பாலாஜி வத்சவா, கண்டிப்பு மிக்கவர், அதோடு காவல்துறையினர்தான் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டிருப்பது, அலட்சியாக செயல்படுவது பிடிக்காது. ஒரு மாலை நேரத்தில் டிஜிபி கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். தகவல் கிடைத்த பெரியக்கடை போலீசார் பேரிகார்டரை திறந்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் கடற்கரை சாலையில் ஹாயாக சென்றனர். பின்னர் வாகனத்தை ஓரமாக நிறுத்துவிட்டு டிஜிபிக்கு விரைப்பாக நின்று சல்யூட் அடிக்க, அவர் திருப்பி அடிக்காத குறைதானாம். பொதுமக்கள் வாகனத்தில் செல்ல தடை விதித்த சாலையில், நீங்கள் மட்டும் வாகனத்தில் வரலாமா? என டோஸ் விட்டதோடு, எங்கே உங்களது ஹெல்மெட் என கேட்க திருதிருவென விழித்துள்ளனர். முதலில் சட்டத்தை நாம் மதித்தால்தான், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியும். ஹெல்மெட் போடாமல் வந்ததற்கு, டிராபிக் போலீஸ் நிலையத்தில் அபராதம் செலுத்திவிட்டு, போகுமாறு உத்தரவிட்டார். இன்னொரு பக்கம் ஐஜி சுரேந்தர் சிங் யாதவ் மப்டியில் வலம் வருகிறாராம். அப்போது ஒரு கடையில் கலெக்‌ஷனில் ஈடுபட்ட போலீசாரை அழைத்து விசாரிக்க, யாரென்றே தெரியாமல் திமிராக பேசினாராம். உடனே அந்த போலீசுக்கு ஆந்திரா பக்கம் டிரான்ஸ்பர் ஏற்பாடு செய்துவிட்டார். இதனால் புதுச்சேரி போலீஸ் கலக்கத்தில் உள்ளதாம்.

Related Stories: