கோயிலுக்கு சொந்தமான எவ்வளவு நிலம், கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளது?: 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய கோயில் அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக ஆக்கிரமிப்பில் சிக்கிய கட்டிம், நிலங்கள் எவ்வளவு என்பது தொடர்பாக வரும் 25ம் தேதி கோயில் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் சென்னையில் பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு கருமாரியம்மன், திருவான்மியூர் மருந்தீஸ்வர், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜவாமி கோயில் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்கள், நிலங்களின் வாடகைதாரர்கள் முறையாக வாடகை கட்டுவதில்லை. இதனால், கோடிக்கணக்கில் வாடகை நிலுவையில் உள்ளது. ஆனால், அந்த பாக்கியை கட்டாமல் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது. இதனால், அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு சில கோயில்களில் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. ஆனால், தற்போது வரை அதை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சென்னை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக வரும் 25ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். குறிப்பாக, நிலங்கள் தொடர்பாக எழுகின்ற பிரச்னைகளும், அதனில் தீர்வு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து சீராய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த கூட்டத்திற்கு கீழ்க்கண்ட விவரங்களுடன் அறிக்கை சமர்பிக்க அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்ளப்படுகிறது.

* சொத்தின் மதிப்பு.

* பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து இனங்களின் விவரம்.

* சொத்துக்களின் வருமானங்கள் அதிகளவில் பெறப்பட வாய்ப்புகள் இருந்தும் பெறப்படாமல் நிலுவையில் உள்ள குறிப்பிடத்தக்க இனங்கள்.

* வழக்குகளினால் தேங்கி கிடக்கும் கோயில் சொத்துக்கள்

* ஆக்கிரமிப்பில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் மீட்கப்பட வேண்டிய இனங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக வரும் 25ம் ேததி சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர்/நிர்வாகிகள் ஆணையரது சீராய்வு கூட்டத்தில் உரிய விவரங்களுடன் கலந்து கொள்ளவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: