அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்: பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை

டெல்லி: பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை  வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொள்கிறார். கலிபோர்னியாவில் இருந்து நேற்று வாஷிங்டன் புறப்பட்ட அதிபர் டிரம்பிடம், ‘ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவீர்களா?’ என நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘இருக்கலாம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதாக  அறிவிக்கப்பட்டவுடன், அங்கு கூடும் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என  நினைக்கிறேன்,’’ என்றார். ஹூஸ்டன் சந்திப்புக்கு முன், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் முயற்சியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக சலுகை  சம்பந்தப்பட்ட அறிவிப்பை, ‘ஹவ்டி மோடி’ கூட்டத்தில் டிரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க  பயணம் நல்வாய்ப்பாக அமையும் என்றும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு செல்வது இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு மைல்கல் ஆகும் என்றார்.

ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியரை தான் சந்திக்கும்போது அதிபர் டிரம்ப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளேன் என்றார். தம்முடன்  இணைந்து அமரெிக்கா வாழ் இந்தியர் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. நியூயார்க்கில் ஜநா.மாமன்ற நிகழ்ச்சிகள் பலவற்றில் தான் பங்கேற்க இருப்பதாகவும் அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஐநாவில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக  இருக்கும் என்றார். தொடர்ந்து, குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கும் பில்கேட்சின் அமைப்புக்கு நன்றி என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

4 மாதத்தில் 4 முறை சந்திப்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நாளை மறுநாள் அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன்பின் இருவரும் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசவுள்ளனர். ஒரே வாரத்தில் இரு தலைவர்களும் 2  முறை சந்தித்து பேசவுள்ளனர். கடந்த மே மாதம் பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜப்பானில் நடந்த டி-20 மாநாடு, பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இப்போது, மேலும் 2  முறை சந்திக்க உள்ளார். 4 மாத காலத்தில் அமெரிக்க அதிபரை, இந்திய பிரதமர் 4 முறை சந்திப்பது இதுவே முதல் முறை.

Related Stories:

>