பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனை

திண்டுக்கல்: பழனியில் சித்தநாதன் பஞ்சாமிர்த நிறுவனர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனர் அசோக்குமார் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தம் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆண்டுக்கு பல கோடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய இரு பஞ்சாமிர்தக் கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.

சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர்களான அசோக்குமார், சிவனேசன் ஆகியோரின் வீடுகள், கடைகள், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் உறவினர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் 2 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.93 கோடி அளவுக்கு அந்நிறுவனர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. ரூ.3 கோடி கணக்கில் வராத பணம் கையிருப்பு வைத்திருந்ததும், மேலும் 56 கிலோ தங்கத்தை கணக்கில் காட்டாமல் வைத்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு சொந்தமான வீட்டிற்கு மீண்டும் வருகை தந்துள்ளனர். இவர்கள் வரும் பொழுதே கையில் ஏராளமான கோப்புகள் மற்றும் இயந்திரங்களை கொண்டு சென்றனர். அதன்படி, இவர்கள் ஏற்கனவே நடத்திய சோதனையில் திருப்தி இல்லாததால் அவர்களிடம் மீண்டும் சோதனை நடத்த வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: