சென்னை அரசு பல் மருத்துவமனையில் சிறுவனின் கீழ் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டி அகற்றம்: இந்தியாவில் முதன்முறையாக சாதனை

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு பல் மருத்துவமனையில் கீழ் தாடையில் இருந்த 1.5 கிலோ எடை கொண்ட  கட்டி அகற்றப்பட்டுள்ளது. சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று, இந்தியாவிலேயே முதன்முறையாக 1.5 கிலோ எடை கொண்ட அரியவகை கட்டியை அறுவை சிகிச்சையின்  மூலம் அகற்றப்பட்ட சிறுவன் எபினேசரை நலம் விசாரித்து, மருத்துவ குழுவினரை பாராட்டினார்.  பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:சென்னை திருவொற்றியூரை சேர்ந்த வினோத்-பிரியாவின் மகன் எபினேசர் (7 வயது). இந்த சிறுவனுக்கு கீழ் தாடையில் பெரிய அளவில் கட்டி வளர்ந்து முகத்தை விகாரமாக்கி உணவு விழுங்க முடியாமல் ஒன்றரை ஆண்டு சிரமப்பட்டான்.  சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர்களால் அழைத்து வரப்பட்டான். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவனுக்கு மரபு ரீதியான வளர்கட்டி (பெமிலியல் ஜய்ஜான்டிபார்ம் சிமெண்டோமா) என்று  கண்டறிந்தனர். அரசு பல் மருத்துவ கல்லூரி வாய்முக அறுவைச் சிகிச்சை நிபணர்களிடம் கலந்தாலோசித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  

அதன்படி, அரசு பல் மருத்துவ கல்லூரி முதல்வர் விமலா வழிகாட்டுதலின்படி வாய் முக அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரசாத், பேராசிரியர் பாலாஜி, இணை பேராசிரியர் அருண்குமார், மயக்கியவியல் நிபுணர் கிருஷ்ணன், குழந்தைகள்  நல அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 1.5 கிலோ எடையுள்ள அரியவகை கட்டி கடந்த 2ம் தேதி அகற்றப்பட்டது. தற்போது சிறுவன் வாயை திறந்து  மூடவும், திட உணவுகளை உண்ணவும் முடிகிறது.இந்தியாவிலேயே 1.5 கிலோ எடையளவு கொண்ட இந்த வகையான கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இதுவே முதன் முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: