வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதியுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை: 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை:  மொபைல் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் நேற்று  ஆலோசனை நடத்தினார்.வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்களை சரி செய்ய புதிய மொபைல் ஆப் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்களே தங்களின் தகவல்களை சரிபார்க்க வசதியாக `வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’  செப்டம்பர் 1 முதல் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டமானது வரும் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.  வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருந்தால், அதாவது பெயரில் எழுத்து பிழை, வயதில் தவறு, பாலினத்தில் தவறு இருந்தால் வாக்காளர்களே நேரடியாக Voters help Line என்ற மொபைல் ஆப் மூலம் திருத்தங்கள் செய்யலாம். இப்படி  மொபைல் ஆப் மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் அவரவர் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள்.

அப்படி திருத்தம் செய்ய வரும்போது, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஒரிஜினல் ஆவணங்களை அவர்களிடம் காட்ட வேண்டும். பின்னர் வாக்காளர் கூறிய தவறுகள் திருத்திக்  கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ், நேற்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியும்  மாநகராட்சி இணை ஆணையருமான லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட  அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் கட்சியில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இச்சிறப்பு திட்டத்தின் செயலியை பயன்படுத்தி  திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று  மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார். இதன்பிறகு வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திருத்தங்கள் சரிபார்க்கப்படும். இந்த திருத்தங்கள் அனைத்தும் அடுத்த மாதம் 15ம் தேதி  வெளியிடப்படவுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: