ஜெ.ஜெ.நகர் மேற்கு பஸ் முனையத்தை பல்வேறு வசதியுடன் 1.14 கோடியில் நவீனமயமாக்க திட்டம்: கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் முடிகிறது

சென்னை:  ஜெ.ஜெ.நகர் மேற்கு பேருந்து முனையத்தை பல்வேறு வசதிகளுடன் 1.14 கோடியில் நவீன மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணியை ஓராண்டுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் (எம்டிசி) கட்டுப்பாட்டில் 36 பணிமனைகள் உள்ளன. இதன் வாயிலாக தினசரி 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதை தினசரி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி  வருகின்றனர்.இவ்வாறு இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை பழுதடைந்து இருந்தது. இதனால் பாதி வழியிலேயே நின்றுகொள்ளும் நிலை, மழை காலங்களில் சீட்டிற்கே தண்ணீர் வருவது போன்ற பிரச்னைகள் இருந்து வந்தது. இதை தடுக்கும்  வகையில் புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.இதேபோல் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. விரைவில் மேலும் சில வழித்தடங்களில் புதிய மின்சாரப்பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இதேபோல்  பயணிகளின் வசதிக்காக மாநகரில் பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் பெரும்பாலானவை சிதிலமடைந்தும், மேற்கூரை இல்லாமலும் உள்ளது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாதததால் மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போக்குவரத்துத்துறை  அதிகாரிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

எனவே இதைத்தடுக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தி.நகர் பஸ் நிலையத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து  வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெ.ஜெ.நகரில் உள்ள மேற்கு பஸ் முனையத்தை 1.14 கோடியில் நவீனமயமாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் பயணிகள் உட்காரும் வசதி, பூங்கா, கழிப்பறை, எல்இடி விளக்குகள் என பல்வேறு  விதமான வசதிகள் இடம் பெறுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, ஜெ.ஜெ.நகரில் உள்ள மேற்கு பஸ் முனையத்தை 1,14,69,759 கோடி செலவில் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள்  முடிக்கவுள்ளோம். இதில் 3530 மீட்டருக்கு தரைத்தளம் அமைக்கப்படுகிறது. பஸ்கள் நிறுத்துமிடம் 30X20மீட்டரில் அமைக்கப்படுகிறது.இதேபோல் பயணிகளின் வசதிக்காக கழிப்பறையானது 5X3மீட்டரில் ஏற்படுத்தப்படுகிறது. இதனுடன் சேர்த்து பூங்கா, பயணிகள் அமருமிடம், நேர அலுவலகம், எல்இடி விளக்கு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட  பணிகள் தற்போது துவங்கியுள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: