மின்கம்பியை மிதித்த மாணவன் பலி தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: போரூர் முகலிவாக்கத்தில் தேங்கிய மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது.  போரூர் அருகே முகலிவாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில் மகன் தீனா (14). கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த பகுதியில் தேங்கி கிடந்த மழை நீரில் கால் வைத்த போது, அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்த  மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சம்பவத்துக்கு காரணமான 2 மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் உயிர் பலிகள் ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் மின்சாரம் பாய்ந்து கொடுங்கையூரில் 2 குழந்தைகள் பலியாகினர். எனவே நீதிமன்றம் தானாக முன்வந்து இதை வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என்று கோரினார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‘எல்லா விஷயத்திலும் நாங்களே முன்வந்து விசாரிக்க முடியாது. மனு தாக்கல் செய்யுங்கள், விசாரிக்கிறோம்’ என்றனர்.

Related Stories: