அனுமதி பெறாமல் கட்டப்பட்ட காவல் நிலைய புதிய கட்டிடம்: பயன்பாட்டிற்காக திறக்க முடியாத அவலம்

ஊட்டி: உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் அருவங்காடு காவல் நிலைய புதிய கட்டிடம் கடந்த பல மாதங்களாக பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டத்தின் படி 7 மீ., உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்ட கூடாது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 1500 சதுர அடிக்குள் மட்டும் கட்டிடம் கட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில், அருவங்காடு காவல் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக வெடிமருந்து தொழிற்சாலைக்கு உட்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதை தொடர்ந்து சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக குன்னூர் - ஊட்டி சாலையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் ஜெகதளா ேபரூராட்சி நிர்வாகம், மாவட்ட அளவிலான (வேளாண் பொறியியல், புவியியல், வனத்துறை உள்ளிட்ட துறைகள் அடங்கிய) ஏ.ஏ.ஏ., கமிட்டியிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதனால் கடந்த பல மாதங்களாக புதிய கட்டிடம் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது.

அனுமதி பெற்றால் தான் திறக்க முடியும் என்பதால், காவல்துறை தரப்பில் ஜெகதளா பேரூராட்சியில் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர். 1500 சதுர அடிக்கு மேல் உள்ளதால், மாவட்ட அளவிலான ஏ.ஏ.ஏ., கமிட்டிக்கு பேரூராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காவல்துறை, அவர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்படும் கட்டிடத்திற்கு உரிய அனுமதி பெறாமல் கட்டியிருப்பது தவறான முன்னுதாரணமாகும், என்றனர்.

Related Stories: