நாகை மாவட்டத்தில் தூர்வாரியதில் முறைகேடு மழைநீர் வடிய வழியில்லாததால் 500 ஏக்கர் நாற்றங்கால் மூழ்கியது: விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை: பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்களை சரியாக தூர்வாராததால், 500 ஏக்கருக்கு விடப்பட்டிருந்த நாற்றங்கால் முற்றிலும் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது நெடுமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் கழனிவாசல் வாய்க்கால், வாடாக்குடி வாய்க்கால், மாங்குடி வாய்க்கால் ஆகிய 3 பாசன வாய்க்கால்கள் உள்ளன. இக்கிராமத்தில், 500 ஏக்கரில் சம்பா சாகுபடிக்கான கைநடவு மற்றும் பாய் நாற்றங்கால் செய்யப்பட்டிருந்தது. அவை தற்போது முளையிட்டு வளரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், நெடுமருதூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் சரிவர தூர்வாராததால் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்த கனமழையால் வாய்க்கால்களில் செல்லும் தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது.

இதனால் 500 ஏக்கர் நாற்று, நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வயலில் புகுந்த தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர். ஆனால் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் தண்ணீர் வடிந்து மீண்டும் பணிகளை துவக்க குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகும். அதற்குள் பொதுப்பணித்துறையினர் உடனே தூர்வாரினால் மட்டுமே தாங்கள் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள முடியும். இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் இப்பகுதிக்கு நேரில் வந்து பொதுப்பணித்துறையினர் தூர்வாரியதை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயில்களில் தண்ணீர் புகுந்தது: கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் மழைநீர் புகுந்து பிரகாரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. கொடிமரத்திற்கு முன் உள்ள நந்தி சிலை தண்ணீரில் மூழ்கியது. இதேபோல், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலின் முன்புறம் உள்ள நந்தி மண்டபம் சுற்றிலும் மழை நீர் தேங்கியதால், பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாமல் திரும்பினர்.

Related Stories: