5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு மத்திய அரசின் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: நாடு முழுவதும் 5, 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வை அமல்படுத்துவது மத்திய அரசின் திட்டம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை மைலாப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது போன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 20 லட்சம் மாணவர்களுக்கு டேப் போன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி இம்மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும். மாணவர்களின் நிலை மற்றும் ஆசிரியர்களின் நிலையை உணர்ந்தே மொழித்தாள் தேர்வுகள் ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் சேவைகள் கல்வி தொலைக்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். முதல்வரிடம் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பப்படும் 5, 8ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு மாணவரின் திறனை மேம்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்ககாக அது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதலே பொதுத்தேர்வை தொடங்கினாலும் படிப்படியாக அவர்களின் திறனை மேம்படுத்த 3 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே  தேர்ச்சிக்கான பட்டியல் வெளியிடப்பப்படும். ஆகையால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. 3 ஆண்டு தேர்வுக்கான கட்டணம் கட்ட தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: