திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி வழியாக செல்லும் சுகநதி ஆற்றில் தொடர் மழையால் தண்ணீர் பெருகியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி வழியாக செல்லும் சுகநதி ஆற்றில் தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஆற்று வழித்தடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வந்தவாசி தாலுகா மேற்பாதி கிராமம் அருகே பல ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் சுகநதியாக உருவெடுத்து வந்தவாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் வழியாக செல்கிறது.

இந்த ஆற்று நீரால் சென்னாவரம், பெருதூர், கடைசிக்குளம் உள்ளிட்ட 20 கிராம விவசாயிகள் பயனடைகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் ஆறு வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்த தொடர்மழையால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஆறு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் சிமைகருவேல மரங்கள் செடிகள் போன்றவை வளர்ந்துள்ளதால் அவற்றை அரசு அகற்றி தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: