மீனாட்சி கோயில் சித்திரை வீதியில் மந்தமாக நடக்கும் மார்பிள் கற்கள் பதிக்கும் பணி

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்பிள் வகை கற்கள் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் நடக்க கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் இருந்த கடைகளை அகற்றி கடந்த 2008ம் ஆண்டு நடைபாதை அமைக்க அப்போது இருந்த எஸ்.எஸ்.கவுஸ்பாட்ஷா எம்எல்ஏ நிதியின் கீழ் ரூ.44.91 லட்சம் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது.

மேலும் 5.61 கோடி மதிப்பில் கோயிலை சுற்றி அழகுப்படுத்தும் பணிகள் செய்தனர். அதன் பின்னர் தனியார் நகை கடை சார்பில் அப்பகுதிகளை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இதற்கிடையே பழைய பேவர் பிளாக் கற்களை அகற்றி விட்டு, ஸ்மார்ட் சிட்டி(சீர்மிகு நகர்) திட்டத்தின் கீழ் வண்ண கற்கள் மூலம் அழகுப்படுத்தும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை பொலியுறும் நகரமாக மாற்றி அமைக்க பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம், வைகை நதி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் சுமார் ரூ.8 கோடியில் அழகுப்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. மார்பிள் வகை கற்கள் பயன்படுத்த பழைய கற்களை அகற்றினர். தற்போது மண் ரோடு போல் காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் கற்களை தோண்டி எடுக்கப்பட்டதால் பக்தர்கள் நடக்க கூட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். தோண்டிய பகுதியில் சாக்கடை மற்றும் குடிநீர் பைப்கள் அமைக்கப்பட்டு 10 நாட்களுக்கும் மேலாகி விட்டது. அதன் பின்னர் கற்களை பதிக்கும் பணிகள் துளி கூட நடக்கவில்லை.

 மேற்கு கோபுரம் உள்ளிட்ட சில பகுதியில் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் அழகு ராஜா கூறும்போது, ‘‘மாதந்தோறும் திருவிழா நடக்கும் மீனாட்சி கோயிலில் அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் பேவர் பிளாக் கற்களை அகற்றி மண் பாதையாக மாற்றி விட்டனர். பணிகளும் கடந்த 10 நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சுவாமி ஊர்வலம் வரமுடியவில்லை. வயதானவர்கள் பேட்டரி கார்கள் மூலம் வலம் வந்தனர். அதுவும் முடியவில்லை. பக்தர்கள் நடக்க முடியவில்லை. எனவே பக்தர்கள் துயர் போக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் கற்கள் பதிக்கும் பணியை ஆமை வேகத்தில் நடத்தி வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: