வண்டலூர் மேம்பாலம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கல்லூரி பஸ்

* 50 மாணவர்கள் உயிர் தப்பினர் * கடும் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: வண்டலூர் மேம்பாலம் அருகே, சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பஸ் திடீர் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த மாணவர்கள் சுமார் 50 பேர், கீழே குதித்து தப்பியதால், உயிர் தப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வண்டலூர் அடுத்த நெடுங்குன்றத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு, 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தினமும் கல்லூரி பஸ் மூலம் மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு, கொண்டு சென்று  விடப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், சுமார் 4 மணியளவில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பஸ் தேனாம்பேட்டை நோக்கி புறப்பட்டது. வண்டலூர் மேம்பாலத்தில் ஏறி இறங்கும்போது, இரணியம்மன்  கோயில் எதிரே பஸ்சின் முன்க பகுதியில் திடீரென புகை வெளியேறியது. இதை பார்த்த டிரைவர், உடனே பஸ்சை நிறுத்தினார். இதில், பஸ் முழுவதும் புகை பரவியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்து  கொண்டு கீழே இறங்கி ஓடினர். அதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவன பரவியது.தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், பஸ் மற்றும் அதில் இருந்த மாணவர்களின் புத்தக பைகளும் எரிந்து நாசமாயின. இச்சம்பவத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வண்டலூர் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு  செய்து, விசாரிக்கின்றனர்.

Related Stories: