திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலப்பு சாலையில் 10 அடிக்கு பொங்கிய நுரையால் போக்குவரத்து பாதிப்பு: ராசிபுரம் அருகே பரபரப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், மதியம்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் மதியம்பட்டி ஏரி அமைந்துள்ளது. சேலம் சேர்வராயன் மலையில் மழை பெய்யும் போது, திருமணிமுத்தாறு வழியாக தண்ணீர் வருகிறது. இதன்மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்நிலையில், சேலம் மாநகர், கொண்டாலாம்பட்டி பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் வாஷிங் பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சாக்கடை கால்வாய் வழியாக நேரடியாக திருமணிமுத்தாற்றில் கலக்கப்படுகிறது. இதனால், திருமணிமுத்தாற்றில் உள்ள தடுப்பணை பகுதியில், ரசாயன கழிவுநீரால் வெண்மை நிறத்தில் 10 அடி உயரத்துக்கு நுரை பொங்குகிறது.

நேற்று காலை மல்லசமுத்திரம்-மதியம்பட்டி சாலையில், திருமணிமுத்தாறு தரைப்பாலம் பகுதியில் அதிகளவில் தண்ணீர் சென்றது. அப்போது சுமார் 10அடி உயரத்துக்கும் மேல், சாலையில் ரசாயனம் கலந்த நுரை தேங்கியது. இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டு, வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். பல மணி நேரத்துக்கு பின், நுரை குறைந்ததை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘இந்த நுரை காற்றில் பறந்து விவசாய நிலங்களிலும் விழுகிறது. ரசாயனம் கலந்த நீர் ஏரியில் தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. சாயப்பட்டறைகளில் இருந்து அதிகப்படியான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: