மளிகைக்கடை, வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு: 15 நாட்களாக தினமும் கொள்ளை: பொதுமக்கள் பீதி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மளிகைக்கடை, வீட்டில் புகுந்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். தொடர் திருட்டால் கொள்ளையர்களின் நகரமாக திருப்பத்தூர் மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் திருப்பத்தூர் ஆதியூர், லக்கிநாயக்கன்பட்டி, கதிரிமங்கலம், குனிச்சி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காரில் வரும் முகமூடி கொள்ளையர்கள் பூட்டிக்கிடக்கும் வீட்டில் பணம் நகைகளை திருடி செல்கின்றனர். இதுவரை, சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருக்கலாம் என தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் அப்பகுதி இளைஞர்கள் இரவில் வாகனங்களில் இரவு ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் சலூன் கடை தொழிலாளி வெங்கடேசன்(35) வீட்டில் கொள்ளையடிக்க 6 முகமூடி ஆசாமிகள் வந்தனர். அப்போது வெங்கடேசன் வீட்டு நாய் கொள்ளையர்களை பார்த்து குரைத்தது. இதனால் முகமூடி ஆசாமிகள் நாய்க்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு காரில் தப்பிச்சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு அளிக்கும்படி கோஷமிட்டனர். அப்போது, தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக டிஎஸ்பி கூறி அவர்களை சமாதானம் செய்தார்.

இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் நேற்றிரவும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம்: திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(46). இவர் அப்பகுதியில் டீக்கடை மற்றும் மளிகைக்கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெளியே நிறுத்தியிருந்த பைக் திருட்டு போனது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: அதேபோல் அப்பகுதியில் உள்ள சீனிவாசன்(37) என்பவர், தனது தம்பி பூபாலனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மாலை வீட்டை பூட்டிக்கொண்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் திருப்பத்தூர் நகர மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருப்பத்தூர் நகரம் கொள்ளையர்களின் நகரமாக மாறி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: