கடைகளை காலி செய்யக் கூறும் திருநெல்வேலி மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

நெல்லை: கடைகளை காலி செய்யக் கூறும் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி டவுனில் மாநகராட்சிக்கு சொந்தமான நேதாஜி போஸ் சந்தையில், காய்கறிகள், பலசரக்கு பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தையில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகள், பழங்கள், மற்றும் பலசரக்கு பொருட்கள் உள்ளிட்டவற்றை தினமும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டை எடுத்து விட்டு புதிய மார்க்கெட் கட்டுவதற்காக நெல்லை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பாவை சந்தித்து, தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரவேண்டும் எனவும், புதிய மார்க்கெட் தயாரான பிறகு பழைய வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க வேண்டும் எனவும் கோரி ஏற்கெனவே மனு ஒன்றினை அளித்தனர். இதை தொடர்ந்து எந்தவித முன் அறிவிப்பும் இன்றி செப்டம்பர் 15ம் தேதிக்குள் கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்கெட்டுக்குள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுள்ளனர். கடைகளை காலி செய்வதற்கு, தங்களுக்‍கு 6 மாதங்கள் அவகாசம் அளிக்‍க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வியாபாரிகள் சங்கம் தலைவர் தெரிவித்ததாவது, மாநகராட்சி அதிகாரிகள் தகாத நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை இந்த சந்தையில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகவும், அவ்வகையான முயற்சியை தாங்கள் முறியடிக்கும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி நிர்வாகம் தங்களை அழைத்து பேசி தங்களுக்கு உரிய இடத்தை தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: