வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் 8 செ.மீ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது இன்றைய தேதி வரை சராசரியாக 26 செ.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். அதில் 25 செ.மீ பொழிந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு 36 செ.மீ மழை கிடைக்க வேண்டிய நிலையில் 42 செ.மீ மழை கிடைத்துள்ளது. இந்த தென்மேற்கு பருவமழையானது அக்டோபர் முதல் வாரம் வரை தொடரும், என தெரிவித்துள்ளார்.

Related Stories: