வழக்கு விசாரணைக்காக அலைவதை தவிர்க்க ஆவடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்: போலீஸ், வக்கீல், பொதுமக்கள் கோரிக்கை

ஆவடி: அம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி பகுதிகளுக்கு வழக்கு விசாரணைக்காக மக்கள் அலைவதை தவிர்க்கும் வகையில் ஆவடி தாலுகாவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  சென்னை புறநகர் காவல் பகுதியில் ஆவடி, பட்டாபிராம் போலீஸ் சரகங்கள் அமைந்துள்ளன. ஆவடி சரகத்தில் ஆவடி, திருமுல்லைவாயல், ஆவடி பீரங்கி தொழிற்சாலை ஆகிய காவல் நிலையங்களும், பட்டாபிராம் சரகத்தில் பட்டாபிராம்,  முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளன. மேலும் ஆவடி பகுதியில் ஆவடி ரயில்வே காவல் நிலையமும், அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படையும்,  ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையமும் உள்ளன. ஆவடி சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், ரயில்வே காவல் நிலையம், அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றில் நடக்கும் குற்ற வழக்குகள் பூந்தமல்லி நீதிமன்றத்திலும், திருநின்றவூர்,  பட்டாபிராம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள பகுதிகளில் திருவள்ளூர் நீதிமன்றத்திலும், திருமுல்லைவாயல், முத்தாபுதுப்பேட்டை, ஆவடி பீரங்கி தொழிற்சாலை ஆகிய காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் அம்பத்தூர் நீதிமன்றத்திலும்  விசாரிக்கப்படுகின்றன.

ஆவடி, பட்டாபிராம் சரக பகுதியை சேர்ந்த போலீசார், பொதுமக்கள், வக்கீல்கள் நீதிமன்ற விசாரணைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி, அம்பத்தூர் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆவடியில் இருந்து 10 கி.மீ தொலைவில் பூந்தமல்லி  நீதிமன்றமும், பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் பகுதியில் இருந்து முறையே 20 கி.மீ, 15 கி.மீ தொலைவில் திருவள்ளூர் நீதிமன்றமும், முத்தாபுதுப்பேட்டை மற்றும் ஆவடி பீரங்கி தொழிற்சாலை பகுதியில் இருந்து 15 கி.மீ, 10 கி.மீ,  தொலைவில் அம்பத்தூர் நீதிமன்றமும் உள்ளன. இந்த 3 நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள், வக்கீல்கள்  செல்ல கால தாமதமும், பண விரயமும் ஏற்படுகிறது. மேலும்,  போலீசார் குற்றவாளிகளை அழைத்து கொண்டு நீண்ட தூரம் செல்ல  வேண்டியது உள்ளது.  எனவே, ஆவடி, பட்டாபிராம் சரக காவல் பகுதிகளுக்கு ஆவடியின் மையப் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‘‘ஆவடி தாலுகா உள்ளிட்ட பகுதிகள் வருவாய் துறை அடிப்படையில் பிரிக்கப்பட்டு நிர்வாகம் மட்டுமே நடக்கிறது. ஆனால்,  நீதிதுறை அதிகாரம் அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர்  ஆகிய நீதிமன்றங்களில்  உள்ளது. இதனை பிரித்து ஆவடி தாலுகாவிற்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்  ஆவடி தாலுகாவில் நீதிமன்றத்தை அமைக்க முடியும்’’ என்றார்.

Related Stories: