2015 உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.62,378 கோடி முதலீடே வந்துள்ளது: சட்ட பஞ்சாயத்து இயக்கம்

சென்னை: 2015 உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.62,378 கோடி முதலீடு மட்டுமே வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளதாவது, 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 2.42 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாக தமிழக அரசு கூறிவந்தது. அதேபோல உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அரசு கூறியிருந்தது. அதில் குறிப்பாக தொழில் துறையில் 50 ஒப்பந்தங்கள், எரிசக்தி துறையில் 15 ஒப்பந்தங்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் 17 என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

தொழில் துறை மற்றும் எரிசக்தி துறையில் மட்டுமே 2 லட்சம் கோடிக்கு முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த மாநாட்டிற்கு செலவிட்ட மொத்த தொகை ரூ.78 கோடி ஆகும். ஆனால், 2018ம் ஆண்டு டிசம்பர் வரை 22 நிறுவனங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் உற்பத்தியை தொடங்கியுள்ளன. மேலும், சரியான அனுமதி இல்லாததால் மற்றும் காலதாமதத்தால் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி எத்தனை நிறுவனங்கள் வேறு மாநிலங்களில் தொழில் தொடங்கியது என்று சட்ட பஞ்சாயத்து எழுப்பிய கேள்விக்கு, இது தொடர்பான தகவல்கள் எங்கள் அலுவலக கோப்புகளில் இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைக்கு போடப்பட்டுள்ள முதலீடுகள் 62,378 கோடி மட்டுமே ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும், 2015ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 30% மட்டுமே நிறைவேறியுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் 3 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் அவற்றின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதேபோல், முதலவர் தற்போது வெளிநாடு பயணம் மேற்கொண்டதில் 8,000 கோடிக்கு முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், முதலீடுகள் எவ்வளவு ஈர்க்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related Stories: