தேர்தல் ஆணைய இணையதளத்தில் பழைய மற்றும் புதிய செல்போன் எண்களையும் பதிவு செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய இணையதளத்தில் பழைய, புதிய செல்போன் எண்களையும் பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருந்தால், அதாவது பெயரில் எழுத்து பிழை, வயதில் தவறு, பாலினத்தில் தவறு இருந்தால் வாக்காளர்களே நேரடியாக Voters help Line என்ற மொபைல் ஆப் மூலம் திருத்தங்கள் செய்யலாம். இப்படி மொபைல் ஆப் மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள்.

அப்படி திருத்தம் செய்ய வரும்போது, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஒரிஜினல் ஆவணங்களை அவர்களிடம் காட்ட வேண்டும். அதன்படி, தமிழகம் முழுவதும் 8,095 பொது மையங்களிலும், 1,662 இ-சேவை மையங்களிலும், 97 வாக்காளர் சேவை மையங்களிலும் வாக்காளர்கள் சென்று திருத்தங்கள் செய்ய முடியும். வாக்காளர்கள் தங்களிடம் உள்ள செல்போனில், NVSP இணையதளத்தில் இருந்து `ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன்’’ என்ற  செயலியை பதிவிறக்கம் செய்து வாக்காளர்களே திருத்தம் செய்யும் வசதியும் உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக இந்த நடைமுறை அமலில் இருந்தும், இதுவரை 13 ஆயிரம் பேர் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்தி, திருத்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் விநியோகம், அனைத்து ஓட்டுச்சாவடிகள், பொது இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஓட்டவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களிடம் இன்னும் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரி செய்ய பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள `ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன்’’ என்ற  செயலியை அனைவரும் பயன்படுத்தலாம். அந்த செயலியில் `வெரிபைவ்’’ என்ற ஒரு காலம் உள்ளது.

அதில் சென்று, வாக்காளர் பெயர் விவரம் மற்றும் செல்போன் நம்பர் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். செல்போன் எண் பதிவாகாவிட்டால் அல்லது செல்போன் எண் மாற்றப்பட்டு இருந்தால் புதிய எண்ணை வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம். போன் நம்பர் மாற்ற எந்த ஆதாரமும் காட்ட தேவையில்லை.

Related Stories: