பைக்கை விடுவிக்காமல் அலைக்கழித்த போலீஸ் காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற டிரைவர்

ஆரணி: ஆரணியில் பைக்கை விடுவிக்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கார் டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஷராப்பஜார் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(32), கார் டிரைவர். இவர் கடந்த 5ம் தேதி ஆரணி ஷராப்பஜார் தெருவில்   சாலை ஓரமாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தில் மது குடித்தனர். அப்போது, போலீசார் ரோந்து வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த போலீசார் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இது தெரியாமல் கோபாலகிருஷ்ணன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் காவல் நிலையத்தில்  உள்ள டூவீலரை காட்டி கேட்டபோது அது தன்னுடையது தான் என கூறியுள்ளார். பின்னர், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் அற்கான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார். ஆனாலும் பணம் கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தார்களாம்.  அவர் கொடுக்க மறுக்கவே, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இல்லை நாளைக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர். இப்படி ஒரு வாரமாக தினமும் காலை, மாலை நேரங்களில் டூவீலரை கேட்டு கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்கு வந்தாராம். ஆனால், போலீசார் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் வந்து தனது டூவீலரை கேட்டுள்ளார். அதற்கு போலீசார் இன்ஸ்பெக்டர்  இல்லை அவர் வந்ததும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் தனது மனைவி, இரண்டு குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டு விட்டு ஆரணியில் உள்ள ஒரு பெட்ரோல்  பங்க் சென்று கேனில் பெட்ரோல் வாங்கிவந்து காவல் நிலையம் முன்பே தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

Related Stories: