100 செயற்பொறியாளர் காலி பணியிடத்தால் பணிகள் பாதிப்பு ஓராண்டாக 18 செயற்பொறியாளர்கள் ஜாலியாக விடுப்பில் இருக்கும் அவலம்: பொதுப்பணித்துறையில் பரபரப்பு

சென்னை: பொதுப்பணித்துறையில் 100 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பல முக்கிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 18 செயற்பொறியாளர்கள் விடுப்பில்  இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஓய்வு  மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 700 உதவி பொறியாளர், 250 உதவி செயற்பொறியாளர், 100 செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில், செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான  பொறியாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், அந்த பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது வரை பதவி உயர்வு பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 100  செயற்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஒரு செயற்பொறியாளர் 3 முதல் 4 பணியிடங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களால் முழுமையாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை.

மேலும், திட்ட பணிகளுக்கான அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளும் முடங்கி போய் உள்ளது. குறிப்பாக, சென்னை மண்டல கட்டுமான பிரிவு செயற்பொறியாளர், தென்மாநகர கோட்ட செயற்பொறியாளர், மணல் குவாரி செயல்பாடுகளின்  திட்ட இயக்குனரகம், கட்டுமான பிரிவு துணை தலைமை பொறியாளர், கட்டுமான பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு, சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட செயற்பொறியாளர் பணியிடங்கள் கடந்த 4  மாதங்களாக காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை தற்போது வரை நிரப்பப்படாத நிலையில், 18 செயற்பொறியாளர்கள் விடுப்பில் உள்ளனர். அவர்கள் டம்மி பதவியில் நியமிக்கப்பட்டதன் காரணமாக, ஓராண்டு மேலாகியும் பொறுப்பு  ஏற்காமல் விடுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை பணிக்கு திரும்பும் படி முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இதனால், அந்த பணியிடங்களுக்கும் சேர்த்து கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், புதிதாக பணியிட மாற்றம் கேட்டு வருபவர்களிடம் ஆளும் கட்சியினர் மூலம் சிபாரிசுக்கு வரக்கூடாது என்றும், அவ்வாறு வந்தால் பணியிட மாற்றம் அளிக்கப்படாது என்று முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம்  பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பதாக பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories: