பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேளச்சேரி: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 47ம் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி மாலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த ஆண்டின் மைய கருத்தாக ‘இறைவனின் நற்கருணை பேழை மரியாள்’ என்ற தலைப்பில்  விழா கொண்டாடப்பட்டது.ஆகஸ்ட் 30ம் தேதி இளையோர் விழா, 31ம் தேதி பக்த சபைகள் விழா, செப்டம்பர் 1ம் தேதி நற்கருணை பெருவிழா, 2ம் தேதி தேவ அழைத்தல் விழா, 3ம் தேதி உழைப்பாளர் விழா, 4ம் தேதி நலம் பெறும் விழா, 5ம் தேதி ஆசிரியர்கள் விழா,  6ம் தேதி குடும்ப விழா கொண்டாடப்பட்டதுஇந்நிலையில் நேற்று அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். இதில் குழந்தை இயேசுவை தாங்கிய மாதாவின் திருவுருவ சிலை  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி கோயில் வளாகத்தில் இருந்து எலியட்ஸ் கடற்கரை சாலை, முக்கிய சாலைகள் வழியாக சென்று திரும்பியது.

முன்னதாக காலை 5.30, 6.30,10.30 பகல் 12 மணி ஆகிய நேரங்களில் தமிழில் திருப்பலிகள் நடந்தன. காலை 7.45 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் ஜெபம், ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இன்று ஆயர் டாக்டர் அந்தோணி டிவோட்டா தலைமையில் அன்னையின் பிறந்த நாள் மற்றும் திருத்தலத்தின் 47வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. பின்னர் கொடி இறக்கத்துடன் விழா முடிகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான வின்சென்ட் சின்னதுரை தலைமையில் குருக்கள், சகோதரிகள், 350 தன்னார்வ தொண்டர்கள், பங்கு மக்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: