ரேஷன் கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு உயர் அதிகாரி தொலைபேசியில் மிரட்டல்: ஆடியோவுடன் போலீஸ் நிலையத்தில் புகாரால் பரபரப்பு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு உயர் அதிகாரிகள் தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர் இது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சமாக 7 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம்  வழங்கப்படுகிறது. இதனால், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இது சம்பந்தமாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட உயர் அதிகாரிகளை ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும்  அறிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை தீர்த்து வைக்க அரசு உயர் அதிகாரி தலைமையில் குழு அமைத்தது.

இந்த குழு ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்து பல மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து  ரேஷன் கடைகளுக்கும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் தரம் இல்லாமல் உள்ளதுடன், கூடுதல் விலைக்கு விற்பதுடன், வெளிமார்க்கெட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.  பொதுமக்களிடம் கண்டிப்பாக மளிகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். விற்பனை செய்யாவிட்டால் ரேஷன் கடை ஊழியர்களிடம் பல ஆயிரம் ரூபாய்  அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளுக்கு மாதம் மாதம் பல ஆயிரம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும்  தற்போது எழுந்துள்ளது.சென்னை, ஆவடியை சேர்ந்த கூட்டுறவு துறை உயர் அதிகாரி ரேஷன் கடை ஊழியர் எம்.பாலாஜி என்பவருக்கு போன் செய்து கமிஷன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கமிஷன் தர மறுத்துள்ளதால், உன்னை பற்றி  நான் பதிவேட்டில் தவறாக எழுதிவிடுவேன். அப்படி எழுதினால் நீ சேல்ஸ்மேனேஜர், ஏரியா மேனேஜர் பதவிக்கு போக முடியாமல் பண்ணி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து போன் மூலம் மிரட்டப்பட்டதால், அவர்  பேசிய ஆடியோவை ரெக்கார்டு செய்து ஆவடி போலீஸ் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.

ஆவடி போலீஸ் நிலையத்தில் பாலாஜி அளித்த புகார் மனுவில், “நான் 3 ஆண்டுகளாக ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறேன். எனது உயர் அதிகாரி அவரது வங்கி அக்கவுண்ட் எண் (4557000400014949 மற்றும் ஐஎப்எஸ்சி PUNB0455700)  அனுப்பி பணம் அனுப்புமாறு போனில் மிரட்டுகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு கூட்டுறவு துறை உயர் அதிகாரி ஒருவரே போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களிடம் அதிகாரிகள்  பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கமிஷன் தர மறுத்துள்ளதால், உன்னை பற்றி நான் பதிவேட்டில் தவறாக எழுதிவிடுவேன். நீ சேல்ஸ்மேனேஜர், ஏரியா மேனேஜர் பதவிக்கு போக முடியாமல் பண்ணி விடுவேன்.

Related Stories: