முழுகொள்ளளவை எட்டிய பிறகு மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்: சேலம் ஆட்சியர் ராமன்

சேலம்: அடுத்த 3 மணி நேரத்துக்குள் மேட்டூர் அணை 120 அடியை எட்டிவிடும். முழுகொள்ளளவை எட்டிய பிறகு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க வாய்ப்புள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார். மேட்டூர் அணையை நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி கரையோரத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.

சரியாக 2 மணி அளவில் மேட்டூர் அணையானது 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 73,000 கன அடியில் இருந்து 75,000 கன அடியாக உயர்ந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு 62,000 கன அடியாக இன்று குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 39,247 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 23,333 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரக்கூடிய உபரி நீரை அப்படியே வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, சுரங்கம் வழியாக உபரி நீர் வெளியயேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அணையின் 16 மதுகுகள் வழியாக நீரானது வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உத்தரவிட்டுள்ளனர். அதேபோல ஆற்றில் யாரும் இறங்கக்கூடாது, செல்போன்கள் மூலம் செல்பி போன்றவைகளை எடுக்கக்கூடாது என்றும் சேலம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் காவிரி கரையோர பகுதிகளில் மீட்புப்பணித்துறை அதிகாரிகளும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: