அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை: பணியிடங்களில் பெண்களுக்கு  பாலியல் தொல்லை  கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றிய கண்ணன் என்பவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆலை நிர்வாகம், கண்ணனை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கண்ணன் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண், புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக கூறி கண்ணனை மீண்டும் பணியில் சேர்க்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. தொழிலாளர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு வருமாறு:

சில குடும்ப நிர்ப்பந்தங்கள் காரணமாக புகாரை பெண்  திரும்ப பெற்றுள்ளார் என்பதற்காக, பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் இருந்து கண்ணனை விடுவித்தால் அது சமுதாயத்துக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும். எனவே,  அவரை பணியில் சேர்க்க வேண்டும் என்று தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறலாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வரை,  சமத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்து விட்டதாக பெண்கள் உரிமை கோர முடியாது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: