500 இளநிலை உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீதுள்ள ஒழுங்கு நடவடிக்கையின் நிலை என்ன? : அறிக்கை சமர்ப்பிக்க டாஸ்மாக் எம்.டி உத்தரவு

சென்னை: டாஸ்மாக்கில் 500 இளநிலை உதவியாளர் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் நிலை குறித்து வரும் 9ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாகம் வெளியிட்டது. இத்தேர்வை எழுத 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதாகவும், ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தநிலையில், தேர்வு கடந்த மாதம் 18ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 9 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர். இதையடுத்து, தேர்வு முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களின் வரிசை எண்கள் அடிப்படையில் இத்தேர்வு முடிவுகளை நிர்வாகம் வெளியிட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருமயிலிசையில் உள்ள டாஸ்மாக்கிற்கு சொந்தமான ஐ.எம்.எப்.எஸ் டிப்போவில் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இந்தநிலையில், டாஸ்மாக் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து வரும் 9ம் தேதிக்குள் கண்டிப்பாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: